திருச்செந்தூர் அருகே குமாரபுரத்தில் பல ஆண்டுகளாக பராமரிக்க படாத நுழைவு வாயிலை புதுப்பிக்க கோரி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்
உலக புகழ் பெற்ற ஆன்மிக திருத்தலங்களுள் ஒன்றாகும். இங்கு
வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, கந்தசஷ்டி, தை பூசம், மாசி திருவிழா, பங்குனி உத்திரம் போன்ற விழா நேரங்களில் பக்தர்கள் பாதயாத்திரை யாக நடந்து வந்து முருகனை வழிபட்டு செல்வர். இவ்விழாக்களில் பக்கதர்களின் வருகை மிக அதிகமாக கானப்படும்
திருநெல்வேலி, சிவகாசி இராஜபாளையம், விருதுநகர் தென்காசி ஆகிய மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள் குமாரபுரம் அருகே அமைக்கப் பட்டுள்ள நுழைவு வாயில் முன் பக்தியுடன் வழிபட்ட பின்னரே முருகன் கோயில் நோக்கி பயணம் மேற்கொள்வர். இந்நுழைவு வாயில் கட்டப்பட்டு 20 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை எந்த விதமான பராமரிப்பும் செய்யப்படாமல் உள்ளது.
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் பய பக்தியுடன் நுழைவது போல, இந்த நுழைவு வாயிலுக்குள் பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், இந்த நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி வழிபட்ட பின்னரே நடை பயணத்தை மேற்கொள்வர். அத்தனை மரியாதை செலுத்தும் இந்த நுழைவாயில் தற்பொழுது பராமரிக்க படாமலும் வண்ணம் பூசப்படாமலும் பழுதடைந்த நிலையிலும் இருப்பது திருச்செந்தூர் வரும் பக்தர்களிடத்திலும், பொது மக்களிடத்திலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கொரோனோ ஊரடங்கு அமுலில் உள்ள இந்த கால கட்டத்திலாவது நுழைவு வாயிலை புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ள கோயில் நிர்வாகமும் , பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்திட பக்தர்கள், ஆன்மீக வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.