தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது திருவுருவப் படத்திற்கு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் கடந்த 2018 மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உட்பட 15 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி நேற்று ( 21.5.2021 ) அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப 17 பேருக்கு இளநிலை உதவியாளர், டிரைவர் உட்பட பணியிடங்களுக்கான உத்தரவை நேற்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதோடு கலவரம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில் குறிப்பிடும்படியான வழக்குகளை தவிர பிற வழக்குகளை அரசு வாபஸ் பெற்றது. இவைகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களிடையே வரவேற்பை பெற்று பலரும் தமிழக அரசிற்கு பாராட்டை தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த நினைவு தினத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடைபிடிக்கின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவர்களது திருவுருவப் படத்திற்கு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது, பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.