கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பலரை கைது செய்த காவல்துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்று தடியடி நடத்தினர். நூற்றுக்கணக்கான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலும், ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படாமலேயே இருந்தது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். அண்மையில் திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடிக்கு சென்றிருந்த போதும், மக்கள் தரப்பில் வழக்குகளை ரத்து செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப் பட்டது.
இந்த நிலையில், மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பதிவான வழக்குகளில் தேவையற்ற வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்ற த்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு கள், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகள் தவிர பிற வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது.
காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் வேறொரு வழக்கில் சிறைக்கு சென்று அங்கேயே உயிரிழந்ததால் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.