தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி முன்னிலை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-
கொரோனா 2-வது அலையை தடுப்பதற்காகவும், மக்களை பாதுகாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் 400 படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.
அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அதில் தொண்டு நிறுவனங்கள், குழந்தை பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாப்பது, நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியாக சிகிச்சை மையம் அமைக்க வேண்டும், அவர்களுக்கு தனியாக கவுன்சிலிங் கொடுக்க வேண்டும், முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான நடவடிக் கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார். வீடுகள் தோறும் காய்கறி விற்பனை செய்பவர் களை ஊக்கப்படுத்தவும், மாநகராட்சி மூலம் காய்கறி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சேர்மக்கனி, ரங்கநாதன், நகர்நல அலுவலர் வித்யா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.