தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கொரோனா நோய் தொற்று 2- வது அலை தீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, அதனை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்துதல், மருத்துவ முகாம்கள், கிருமிநாசினி தெளித்தல், வீடுகள்தோறும் பொது மக்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிதல், நோய் தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல், பொது மக்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குப்பைகளை கையாளும் வாகனங்களில் கொரோனா குறித்து விழிப்புணர்வு பாடல், செய்திகளை ஒலிக்கச்செய்தல், இராட்சத வாகனங்கள் மூலம் தெருக்களில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் இன்று( 20. 5.2021 ) நடைபெற்ற இப்பணிகளுக்கான தொடக்க விழாவில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு, தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள், கொரோனா குறித்து விழிப்புணர்வு பாடல், செய்திகளை குப்பைகளை கையாளும் வாகனங்களில் ஒலிக்கச்செய்து அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்திராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, பொதுக்குழு உறுப்பினர் என்பி.ஜெகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.