தூத்துக்குடியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்கம்பம், மரம் சாய்ந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் மேக மூட்டமாகவும், ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் இதமான சூழல் நிலவி வந்தது. புயல் நகர்ந்து சென்றதும் மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் அடிக்க தொடங்கியது. ஆனால் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று ( 19.5.2021 ) மதியம் 2.30 மணி அளவில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து காற்று வீசிக் கொண்டே இருந்தது. 3 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை தொடர்ந்து 3.30 மணி வரை பெய்தது. அப்போது தூத்துக்குடி பிரையண்ட்நகர், மில்லர்புரம் ஆகிய பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் மில்லர்புரத்தில் மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதனால் மின்கம்பமும் சரிந்தது. அந்த பகுதியில் நின்ற 3 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.