இடைச்சேவல் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாயணன் உடலுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவரான எழுத்தாளர் கி.ராஜநாராயணன், புதுச்சேரியில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 99. உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்
எழுத்தாளர் கி.ரா. அவர்களின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை ஆகும். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் கி.ரா. அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அவருக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கி.ராஜநாராயணின் உடல் புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு கொண்டு வரப்பெற்று வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலர், கண்ணபிரான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கர நாராயணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.