கயத்தாறில் லாரி உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்து பணத்தை மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ராமசாமி மகன் மோகன் (60) என்பவர் லாரி செட் வைத்துள்ளார். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு திருமங்கலக் குறிச்சியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துப்பாண்டி (54) என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். முத்துப்பாண்டி கடந்த 28.04.2021 அன்று கோவாவிலிருந்து மின்விசிறி (Crompton Fan) லோடு ஏற்றி வந்து மதுரைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மோகனின் நண்பர் சக்திவேல் பணம் ரூபாய் 5 லட்சத்தை மோகனிடம் கொடுக்குமாறு, லாரி டிரைவர் முத்துப்பாண்டியிடம் கொடுத்துள்ளார்.
அவரும் பணத்தை ஒப்படைப்பதாக கூறி பெற்றுக் கொண்டு வந்தவர், பணத்தை மோகனிடம் கொடுக்காமல், லாரியை மதுரையில் விட்டு, விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து பணத்தை கேட்பதற்காக மோகன் திருமங்கலக்குறிச்சியில் உள்ள முத்துப்பாண்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது, அவரை அவதூறான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் அரிகண்ணன், தலைமைக் காவலர் ஆறுமுகசங்கர், காவலர்கள் பாலமுருகன் மற்றும் அழகுமுத்துப் பாண்டியன் ஆகியோர் தப்பியோடிய முத்துப்பாண்டியை கயத்தாறு கட்டபொம்மன் மணிமண்டபம் அருகே கைது செய்து, அவரிடமிருந்த பணம் ரூபாய் 5 லட்சத்தையும் மீட்டனர்.
பணத்தை மோசடி செய்த முத்துப்பாண்டியை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சத்தை மீட்ட கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.