தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் மாநகரில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதையும் மீறி ஏராளமானோர் வெளியில் சுற்றி வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டு இருந்த கடைகள் அனைத்தையும் காலை 10 மணிக்கே அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, காய்கறி, மளிகை, மற்றும் பலசரக்கு கடைகள், மீன், இறைச்சி கடைகள் மட்டுமே காலை 10 மணி வரை திறந்து இருப்பதால் பொதுமக்கள் காலையிலேயே காய்கறி மார்க்கெட்டிலும் பலசரக்கு கடைகளிலும், இறைச்சி, மீன் கடைகளிலும் குவிந்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட், காமராஜர் காய்கறி மார்க்கெட், வ.உ.சி. கல்லூரி அருகே உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் அனைத்தும் காலையிலேயே மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது. மார்க்கெட் அருகே உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை தீவிரமாக கண்காணித்து நோய்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் போர்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கா தவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காவல் துறை சார்பில் தினமும் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், இன்று ( 18.5.2021 ) காலை 6 மணி முதல் மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மற்றும் காவலர்கள் இன்று காய்கனி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மார்க்கெட்டில் சமூக இடை வெளியின்றி பொது மக்கள் அதிகமாக கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், முக கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத வர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி வி.வி.டி சிக்கனல், தெற்கு காவல் நிலையம் முன்பு, குரூஸ்பர்னாந்து சிலை அருகில் என நகரில் 20 க்கு மேற்பட்ட இடங்களில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மாநகரில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் ஊரடங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் பணிகளை தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் மாநகர் முழுவதும் வலம் வந்து தொய்வின்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இது போன்று காவல்துறையினர் இனி வரும் காலங்களில் பொதுமக்களின் நலனுக்காக கொஞ்சம் அர்பணிப்போடு தொடர்ந்து பணியாற்றி வந்தால் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த கொடிய கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தை எதிர்த்து போரிடும் முன்களப்பணியாளர்களாக கருதப்படுகிற அனைவரது பணியும் மகத்தானதாகவும், போற்ற தக்கதாகவும் இருப்பினும், இன்றைய சூழலில் முககவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது, ஊரடங்கை கடைபிடிப்பது இம்மூன்று மட்டுமே நம்மை காக்கக்கூடிய மிகப்பெரிய பாதுகாப்பு கவசங்களாக உள்ளன. இதில் ஊரடங்கு எனும் கொரோனாவிற்கு எதிரான பிரம்மாஸ்திரத்தை பொதுமக்கள் பின்பற்ற தொய்வின்றி, ஓய்வின்றி உழைக்கும் காவல்துறையினருக்கு நாம் ஒரு ராயல் சலியூட் அடித்து பெருமை படுத்தினால் அது மிகையாகாது!