கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று விவிடி சிக்னல் சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை, சிலர் பொருட்படுத்தாமல் தேவையில்லாமல் சுற்றித்திரிகின்றனர். பொதுமக்களுக்கு தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தும் பணியில் 2000 போலீசார் 65 இடங்களில் வாகன சோதiயில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (18.05.2021) தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம், கீழ ரத வீதி, மேலப்பெரிய காட்டன் வீதி, குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு மற்றும் வி.வி.டி சிக்னல் சந்திப்பு ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி தேவையில்லாமல் வெளியே வந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் காலை 10 மணிக்கு மேல் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப் பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.