தூத்துக்குடியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே தொற்றை குறைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை மாவட்டத்தில் ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 க்குள் இருந்துவந்தது. கடந்த ஒரு வாரமாக தோற்று எண்ணிக்கை படிப்படியாக 500, 600 என உயர்ந்து நேற்று முன்தினம் 914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 941 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் படவேண்டும். ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றுபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொற்று குறைய வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.