கோவில்பட்டி அருகே கொரோனா நோயாளிக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்த நோயால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும் மராட்டியம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் (மியூக்கோர்மைகோசிஸ்) தாக்கி வருகிறது. மராட்டியத்தில் மட்டும் இந்த நோய்க்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஒரு சில மருந்துகள் எடுத்துக் கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளரான 57 வயது ஆணுக்கும், அவருடைய மனைவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அந்த ஆண் தனது 2 கண்களையும் திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில், அவரது கண்ணில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள், அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.