ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து புறப்பட்ட ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகலில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திரவ மருத்துவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கும் முயற்சியை தெற்கு ரயில்வே கடந்த மே 14-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து புறப்பட்ட அக்சிஜன் ரயில் இன்று பிற்பகல் 3.58 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயில் மூலம் 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட மருத்துவமனைகள், ஆக்சிஜன் நிரப்பும் மையங்கள், தட்டுப்பாடு உள்ள பகுதிக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், தென் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கிட வரப்பெற்ற 78.82 மெட்ரிக் டன் ஆக்சினை 5 டேங்கர் லாரிகள் மூலம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தொழில் துறை தமிழ்நாடு மற்றும் பல தமிழ் பண்பாட்டு தொல் பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சின் போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.