விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி பலியான வைப்பார் கிராமத்தைச் சேர்ந்த இருவர் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, கனிமொழி எம்பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினர்.
கடந்த 13 ந் தேதி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் கோட்டைபாண்டி (வயது 55) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த வானமல்லுச்சாமி என்பவரின் மகன் ரமேஷ்(வயது 30) இருவரும் அக்கிராமத்தில் உள்ள முருங்கைக்காய் தோட்டத்தில் முருங்கைக்காய் பறித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கனமழை பெய்ததால் இருவரும் முருங்கை தோட்டத்தின் அருகே இருந்த வேப்பமரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், இன்று ( 16.5.2021) வைப்பார் கிராமத்திற்கு சென்ற, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மின்னல் தாக்கி பலியான இருவரது குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினர்.
இந்நிகழ்வின் போது, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.