இந்து சமய அறநிலையத் துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகள், அவர்களை பராமரிப்போருக்கு உணவு தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் உணவகங்களை தேடி நோயாளிகளின் உறவினர்கள் சிரமப்படாமல் இருக்க , தமிழக அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஊரடங்கின் மறு உத்தரவு வரும் வரை இந்த உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தூத்துக்குடி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரிவில் தினசரி 5000 உணவு பொட்டலங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு காலை 680 உணவு பொட்டலங்களும், மதியம் 1000 உணவு பொட்டலங்களும், இரவு 300 உணவு பொட்டலங்களும் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், இன்று (15.5.2021) காலை தூத்துக்குடி இந்து சமய அறநிலை துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் பாவலன் உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.