அரபிக்கடலில் உருவாகி உள்ள " டவ்தே புயல் " காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், அனைத்து மீனவ கூட்டுறவு சங்கம், கிராம பங்குதந்தை, ஊர்நலக் கமிட்டி தலைவர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இருந்து பெறப்பட்ட வானிலை எச்சரிக்கையின் படி, தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே கடல் சீற்றத்துடன் காணப்படும். கடல் அலை 2.5 மீட்டர் முதல் 3.4 மீட்டர் உயரம் எழக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். இதனை அனைத்து மீன்பிடி இறங்கு தளங்கள், மீன் ஏலக்கூடம் உள்ளிட்டவற்றில் அறிவிப்பு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.