• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் ஆலையின் முதல் கட்ட ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது

  • Share on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவதற்காக தூத்துக்குடி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க அனுமதி தரவேண்டும் என கூறியிருந்தது.

இந்த மனுவின் பேரில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

அதன்படி ஆக்சிஜன் உற்பத்தி பணியை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் அடங்கிய கண்காணிப்பு குழுவினையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த கண்காணிப்பு குழுவின் கீழ் 6 பேர் அடங்கிய மேற்பார்வை குழுவை நியமித்துக் கொள்ள கண்காணிப்பு குழுவினருக்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது.

இந்நிலையில் நீதிமன்றம் அளித்த அனுமதியை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த வாரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

பரிசோதனை முறையில் கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக மருத்துவ பயன்பாட்டுக்காக இன்று 4.820 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

காலை 7 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஸ்டெர்லைட் ஆலையின் தளவாட பொருட்கள் கொண்டு செல்லும் நுழைவு வாயில் முன்பாக தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார். ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிக்கு பாதுகாப்பாக 6 பேர் அடங்கிய துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

பரிசோதனை முறையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயார் செய்யப்பட்ட சுமார் 5 மெட்ரிக் டன் ஆக்சிஜன் முதல் கட்டமாக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 10 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். பின்னர் இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு முழு கொள்ளளவான 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஸ்டெர்லைட்டில் தயார் செய்யப்படும் ஆக்சிஜனை எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்புவது என்பதை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முடிவு செய்யும். அதன்படி இங்கிருந்து ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்படும்," என்றார்.

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படுக்கை வசதிகளுடன் ஆக்சிஜன் வசதியும் அதிகம் தேவைப்படுவதால் ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் முழுவதுமாக தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

  • Share on

ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி - எம்பி., அமைச்சர் தொடங்கி வைத்தனர்!

சிதம்பர நகரில் கடைகள் இடித்து அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

  • Share on