தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில், முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. இங்கிலாந்து நாட்டில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் 12-5–1820–ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். அவர் செவிலியர் சேவையை தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பிறந்த மே 12–ம் நாள் உலக செவிலியர் தினமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மருத்துவமனை வளாகத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு, செவிலியர் தின வாழ்த்துக்களை கூறினர். எதிர்காலத்தில் செவிலியர் ஆக உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெறும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், செவிலியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் செவிலியர்கள் ஒருவருக்கொருவர் செவிலியர் தின வாழ்த்துக்களை கூறி பரிமாறி கொண்டனர்.