• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பொதுமக்கள் நடமாட்டத்தை இப்படியும் கண்காணிக்கிறாங்க!

  • Share on

தூத்துக்குடியில் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி சுற்றுவோரை டிரோன் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை முன்னிட்டு காலையில் சாலைகளில் சிறிது வாகன போக்குவரத்து காணப்பட்டது. பகல் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. தூத்துக்குடி, திருச்செந்தூரில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஏராளமானவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன. வாடகை வேன்கள், கார்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக அதிக அளவில் வாகனங்களில் சென்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தற்காலிக பேருந்துநிலைய வளாகத்தில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் நெரிசல் இன்றி காய்கறிகளை வாங்கி சென்றனர். மாவட்டத்தில் அத்தியாவசிய தொழில் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. அதில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர். தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் பாதைகளில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்தனர். மார்க்கெட்டுக்கு செல்பவர்கள் சமூக இடைவெளி விட்டு நடந்து சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.

மேலும் பொதுமக்கள் கூட்டம் சேராமல் தடுக்கும் வகையில் பறக்கும் கேமிரா (டிரோன்) மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆட்டோக்களில் தெருத் தெருவாக காவலர்கள் ரோந்து சென்று ஒலி பெருக்கி மூலம் மக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் என்று அறிவிப்புகளை செய்து கொண்டே இருந்தனர். இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 176 பேர் கைது

  • Share on