• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காது: வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி

  • Share on

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டு வெள்ள பாதிப்பு ஏற்படாது என வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, கோரம்பள்ளம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வெளியேற்றிட செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை நேரில் சென்று இன்று (21.11.2020) ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி வட்டம் புதுக்கோட்டை உப்பாத்து ஓடை, கோரம்பள்ளம் கண்மாய் ஆகிய நீர்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்டார். கோரம்பள்ளம் கண்மாயில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கீழ உள்ள கிராம பகுதியில் பாதிப்பை ஏற்படாத வகையில் கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பி அன் டி காலனி, ரயில்வே கேட் பகுதி, பிரைண்ட்நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சியின் மூலம் அகற்றும் பணிகளையும் பார்வையிட்டார். இப்பகுதியில் மழை நீரை வெளியேற்றும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மழை நீர் வெளியேற்றும் பணிகளை கூடுதல் மோட்டார்களை கொண்டு விரைந்து வெளியேற்ற வேண்டும். வரும் காலங்களில் கூடுதல் மழைப்பொழிவு இருப்பினும் சமாளிக்க தேவையான நடவடிக்கைகைள இப்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி,  தெரிவித்ததாவது: 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 16ம் தேதி ஒரே நாளில் அதிக அளவிலான மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.தேங்கியுள்ள நீர் போர்க்கால அடிப்படையில் மோட்டார்களை கொண்டு வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் கூடுதல் மோட்டார்களை கொண்டு நீர் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக அதிகமான மழை பெய்தாலும் கூடுதல் நீரை வெளியேற்றும் வகையில் பெரிய அளவிலான பம்ப்செட்டுகளும் பயன்படுத்த தயார் செய்யப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட தாழ்வான பகுதிகளில் இதுபோன்ற கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் மழை வெள்ள நீர் வடிகால் திட்டம் 3 கட்டமாக செய்யப்படுகிறது. விஜய் வேர்கவுஸ் முதல் பெரிய பள்ளம் வரையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் உப்பாற்று ஓடை வரையிலும் 2 கட்ட பணிகள் 90 சதவிதம் முடிந்துள்ளது. பிரையண்ட்நகர், மாசிலாமணிபுரம், சுப்பையாபுரம் பகுதியில் 3ம் கட்ட பணிகள் டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

அடுத்த ஆண்டு இதுபோன்ற நிலை ஏற்படாது. அனைத்து அலுவலர்களுக்கும் இந்த ஆண்டு ஏற்படும் பாதிப்பு மற்றும் பிரச்சனைகள் நிகழாத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில்கொண்டு மழை நீர் வடிகால் திட்டம் கொண்டு வரப்பட்டு 2 கட்ட பணிகள் 90 சதவிதம் முடிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்ட பணியும் விரைவில் முடிக்கப்படும். என தெரிவித்தார்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்,  சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், நகர்நல அலுவலர் மரு.அருண்குமார், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர்கள் பத்மா, அண்ணாத்துரை மற்றும் உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர். 

  • Share on

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் வெளிநாட்டு பறவைகள் திருட்டு : காவல்துறை விசாரணை

காஷ்மீரில் விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

  • Share on