தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை மிரட்டல் மற்றும் மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.
கடந்த 03.03.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கிழக்குத் தெருவைச் சேர்ந்த காளிபாண்டி மகன் பாலமுருகன்(22) என்பவரை முன்விரோதம் காரணமாக தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன்கள் கருத்தப்பாண்டி (40), காளிச்சாமி (39) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சக்திநகரை சேர்ந்த பாலசுப்பிர மணியன் மகன் சங்கரபாண்டியன் (22) ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கருத்தபாண்டி, காளிச்சாமி, சங்கரபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான கருத்தபாண்டி மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இவ்வழக்கின் மற்றொரு முக்கிய எதிரியான காளிச்சாமி என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதியும்,
கடந்த 04.04.2021 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரல் பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் ஏரல் புதுமனை பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் இசக்கிமுத்து (45) என்பவர் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை என்பவரை கைது செய்தனர். மேற்படி வழக்கில் எதிரியான இசக்கிமுத்து என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏரல் காவல்நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதாவும்
கடந்த 11.02.2021 அன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரை பகுதியில் சேதுக்குவாய்த்தான் கிழக்கு தெருவை சேர்ந்த விஜயராஜ் மகன் சத்தியமுகேஷ் (எ) சதீஷ் (21) மற்றும் முருகேசன் மகன் சதீஷ்குமார் (19), தெற்கு நல்லூர் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சுகுமார் (20), சேர்ந்தபூமங்கலம் பகுதியை சேர்ந்த மாசானதுரை மகன் உதய ஆசாத் (20), சொக்கபாலன்கரி பகுதயை சேர்ந்த பிச்சையா மகன் மாரிதுரை (21) மற்றும் மயிலோடை பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் பாஸ்கர் (25) ஆகியோர் சட்ட விரோதமாக ஆற்று மணல் திருட்டில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் 6 பேரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கின் முக்கிய எதிரியான சத்தியமுகேஷ் (எ) சதீஷ் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய குரும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜூடியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 3 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ் மேற்படி எதிரிகளான 1) தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காளிச்சாமி, 2) ஏரல் புதுமனை பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் இசக்கிமுத்து, 3) சேதுக்குவாய்த் தான் கிழக்கு தெருவை சேர்ந்த விஜயராஜ் மகன் சத்தியமுகேஷ் (எ) சதீஷ் ஆகிய 3 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் எதிரிகள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.