தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீரென்று இறந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குமரெட்டியாபுரம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் இருமல், சளி தொல்லை காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கு இருந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் படுக்கை ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த பெண் திடீரென இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பெண் இறந்து விட்டதாக குற்றம் சாட்டி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிகாரிகள் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ள பகுதியிலும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி கூறியதாவது:-
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை. மொத்தம் 1,212 படுக்கை வசதி உள்ளது. இதில் 700 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு என்று தனி வார்டு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. மீதம் உள்ள 150 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஆக்சிஜன் கொள்கலனை பொறுத்தவரை 10 கிலோ லிட்டர், 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கொள்கலன்கள் உள்ளன. இதில் 10.06 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. பி வகை சிலிண்டர் 200-ம், டி வகை சிலிண்டர் 100-ம் கையிருப்பில் உள்ளது. எனவே, அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் ஆக்சிஜன், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் போன்ற சிகிச்சைக்கான மருந்துகள் போதிய அளவில் உள்ளன என தெரிவித்துள்ளார்.