ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த, உடல் உறுப்புகள் சிதைந்த, இழந்த உறவினர்கள், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நாட்டின் அவசர கால தேவையை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே 4 மாதங்கள் திறந்து செயல்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உள்ளூர் நிர்வாகிகளும் இந்த குழுவில் இடம்பெறலாம் எனவும் நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
தமிழக அரசின் முடிவுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், வீட்டு முற்றங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களோடு கோலங்கள் இட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ( 29.4.2021 ) ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த, உடல் உறுப்புகள் சிதைந்த, இழந்த உறவினர்கள், தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயில் இருந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இறந்தவர்களின் புகைப்படங் களை கையில் ஏந்தியவாறு, ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.
அதனையடுத்து, ஆட்சியர் அலுவலக பிராதன நுழைவு வாயிலில் ஏடிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த, உடல் உறுப்புகள் சிதைந்த, இழந்த உறவினர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்டத்தின் மூச்சுக்காற்றை நச்சு காற்றாக மாற்றிய, உயிர்ச்சூழலை அழித்த, மனித உயிரிழப்புகளுக்கு காரணமான ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அறவழியில் போராடிய காரணத்திற்காக எங்களின் பிள்ளைகள், கணவனை, அம்மாவினை, இரவு பகல் பாராது உழைத்து எங்கள் குடும்பங்களை வாழ வைத்த தந்தையினை, சகோதரனை, காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டினால், கொடூர தடியடியால் துடிக்க துடிக்க படுகொலை செய்ததை, உடல் உறுப்புகள் சிதைத்ததை, கண் மூடும் வரை எங்களால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது.
நச்சு ஆலை என தமிழக அரசின் கொள்கை முடிவு எடுக்கப்பட்டும், சென்னை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டும், நிரந்தரமாக மூடப்பட்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை, உயிர் மூச்சான பிராணவாயுவை நாங்கள் இந்தியாவிற்கே உற்பத்தி செய்து தருகிறோம் என்று உண்மைக்கு புறம்பாக சதியின் உச்சமாக பொய்யான காரணங்களைக் கூறி திறக்கப்பட உள்ளது என்பதை எங்கள் உள்ளங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
நச்சு ஆலை திறக்கப்படுவது என்பது எங்களின் உறவுகளின் தியாகங்களை இழிவுபடுத்தி மேலும் எங்களின் வலிகளையும் வேதனைகளையும் அதிகப்படுத்தி யுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆயிரம் வழிகள் இருக்க ஸ்டெர்லைட்டை திறந்துதான் ஆக்சிஜன் உற்பத்தி என்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய மூச்சுக் காற்றுக்காக போராடி மூச்சுக்காற்றை பறிகொடுத்த, உடலுறுப்பு சிதைவுக்கு உள்ளான குடும்பங்களின் ரீதியில் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். என தெரிவித்தினர்.