ஆண்டிபட்டியை விட்டுவிட்டு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் சசிகலாவால் இணைந்த டிடிவி தினகரன் அதற்கு பிறகு ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஆளுநரிடம் மனு அளிக்க வைத்தார். அதன்பிறகு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். 18 பேரின் பதவியும் பறிபோனது.
இந்நிலையில், அதிமுகவை மீட்க போராடி வரும் அவர், ஒரு கட்டத்தில் அமமுக என்ற கட்சியை தொடங்கினார். அவர் சுயேட்சையாக 2018ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை தோற்கடித்து 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
டிடிவி தினகரன் ஆர்கே நகரில் பெற்ற வெற்றி பெற்ற போதும், அவரது அமமுக இயக்கம் 2019 தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு அவரது இயக்கத்தினர் பலர் அதிமுகவிற்கு தாவ தொடங்கினர். இந்நிலையில் தற்போது அதிமுகவில் சீட் கிடைக்காத பலர் அமமுகவிற்கு தாவ தயாராகி வருகிறார்கள்.
இந்த முறை சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் டிடிவி தினகரன், தான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
முதலில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போட்டியிடுவதாக கூறிய டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம், தொகுதி சீரமைப்பில் நாயக்கர் சமுதாய ஓட்டுக்கள் குறைந்து, தேவர் சமுதாய ஓட்டுக்கள் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்வது காரணம் என்று கூறுகிறார்கள்.
தேவர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள கயத்தாறு ஒன்றியம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், முன்பு ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்தது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் தொகுதியை ரத்து செய்து அதிலிருந்த பகுதிகளை ஓட்டப்பிடாரம் மற்றும் வைகுண்டம் தொகுதியில் சேர்த்ததால், ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்த கயத்தாறு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகள் கோவில்பட்டி தொகுதியில் சேர்ந்து விட்டன. இதனால் நாயக்கர்கள் பெரும்பான்மையாக இருந்த கோவில்பட்டி தொகுதி தற்போது தேவர் சமுதாயத்தின பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியாக மாறிவிட்டது.
ஏற்கனவே ஆண்டிபட்டியில் போட்டியிடுவேன் என்று கூறிய டிடிவி தினகரன், அங்கு ஓபிஎஸ், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் போட்டியிட வேண்டாம் என்று கணித்து கோவில்பட்டியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கோவில்பட்டி தொகுதி சிறிய தொகுதி என்பதால் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று டிடிவி நினைக்கிறாராம். இதற்கிடையே அதிமுக கூட்டணியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 3ம் முறையாக களம் இறங்குகிறார். திமுக கூட்டணியில் கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.