தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் நடைபெறயிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களமே அதிரி புதிரியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து திமுக, அதிமுக ஆகிய மாபெரும் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன.
தூத்துக்குடியில் திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப் பாண்டியன் அல்லது கூட்டணி கட்சியான பாஜக போட்டியக்கூடும் என பேசப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கி பரபரப்பை கிளப்பியது அதிமுக.
அதிமுகவிலும், பாஜகவிலும் பல கோஷ்டிகளாக சீட் பெற முயற்ச்சித்து உட்கட்சி நிர்வாகிகளுக்கிடையே பனிப்போர் நடந்து வந்த நிலையில், யாராவது ஒரு தரப்புக்கு சீட் கொடுக்கப்பட்டால் மற்றொரு தரப்பினர் அதிர்ப்தியால் தேர்தல் பணிகளில் சுனக்கம் காட்டுவர். இதனால் வெற்றிவாய்ப்பு பாதிக்கக்கூடும். ஆகவே இதனை சரிகட்டவே, தூத்துக்குடி தொகுதியை த.மா.கா விற்கு ஒதுக்கி அதிமுக அதிரடி காட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவரான எஸ்டிஆர். விஜயசீலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இளம் தொழிலதிபரான எஸ்டிஆர். விஜயசீலன் வ.உ.சி கல்லூரியில் படிக்கும் காலத்தில் அப்போது அங்கு நடைபெற்ற மாணவர் மன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று தலைவரானார். அரசியல் நுழைந்த இவர் மாணவர் காங்கிரஸ் தலைவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் என பல்வேறு பொறுப்புக்களை வகித்து வந்தார்.
2006 சட்மன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்டிஆர். விஜயசீலன், உட்கட்சி விவகாரத்தால் வேட்பாளர் அறிவிப்பில் இவர் பெயர் வாபஸ்பெறப்பட்டு போட்டியிட முடியாமல் போனார்.
அதன் பின், ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர், ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியவுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து த.மா.கா வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, 2016 சட்மன்ற தேர்தலில் த.மா.கா சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
நாடார் மற்றும் கிறிஸ்தவ நாடார் சமூகம் பரவலாக கானப்படும் தூத்துக்குடி தொகுதியில், கிறிஸ்தவ நாடார் வகுப்பை சேர்ந்தை எஸ்டிஆர். விஜயசீலன் அதிமுக கூட்டணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது, வெற்றியின் முதல் படிக்கட்டாக அரசியல் நோக்கர்களாக பார்க்கப்படுகிறது.
கட்சிப்பணி, கல்விப்பணி, விவசாயம் மற்றும் உற்பத்தியாளர் என பன்முகத்தன்மையோடு விளங்கி வருபவரும், சமூகத்தில் பாரம்பரிய குடும்ப பின்னணி கொண்டவராகவும் வேட்பாளர் விளங்குவது அவரின் வெற்றிக்கு கூடுதல் ப்ளஸ்.
ஆகவே, இந்த சட்டமன்ற மன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் சம பலத்தில் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும், தேர்தல் களம் தெறிக்கும் என்கின்றனர் தொகுதி வாசிகள்.