தமிழக சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி முதல் முறையாக அதிமுகவில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதிமுக தொடங்கப்பட்ட பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அனைத்திலும் தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட்டுள்ளது. முதல் முறையாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சியான பாஜக விற்கு ஒதுக்கப்பட்டு அப்போதைய அதன் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக இந்த தொகுதி கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ள இந்த தொகுதியை மீண்டும் அதிமுகவுக்கு ஒதுக்கவேண்டும் என்றும் மாவட்ட தலைநகரை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் முடிவை அதிமுக தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனராம்.
அதிமுக கூட்டணியில் இன்னும் 14 தொகுதிகள் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், மீண்டும் அதிமுக போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் தலைமை ஈடுபட்டுள்ளதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு தூத்துக்குடி தொகுதியில் அதிமுக போட்டியிட்டால், முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான செல்லப் பாண்டியனுக்கே அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால், அதிமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு தருவதாகவும், தங்களது கட்சி எந்ததொகுதியிலும் போட்டியிடாமல் விலகி இருப்பதற்கான நிலைபாட்டை அக்கட்சி எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.