கோவில்பட்டி தொகுதியில் மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் செ ராஜு போட்டியிடுகிறார்.
கடம்பூர் ராஜு (பிறப்பு: ஆகஸ்டு 20, 1959 ). இவர் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தில் பிறந்தவர். பி.யூ.சி. படிப்பை முடித்து, பின்னர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். இவருக்கு இந்திரா காந்தி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
பள்ளி பருவம் முதல் எம்.ஜி.ஆர் திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்ட அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு தீவிர ரசிகராக இருந்தார். எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியதும் கடம்பூர்.செ.ராஜு தனது 18 வயதில் 1978 ஆண்டு தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டு தனது அரசியல் பணிகளை தொடங்கினார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவிற்காக தனது பணிகளை சிறப்பாக செய்த காரணத்தினால் 1982ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இளைஞரணி ஒன்றிய செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமனம் செய்யப்பட்டார். 1988ல் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட பொருளராக ஜெயலலிதாவினால் நியமனம் செய்யப்பட்டார்.
1992ல் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தற்பொழுது அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
1989 முதல் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட கடம்பூர்.செ.ராஜுவுக்கு 2011 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதில் வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் நுழைந்தார்.
பின்னர், 2016 ல் சட்டமன்ற தேர்தலில் முதலில் கடம்பூர்.செ.ராஜு வாய்ப்புக் கிடைக்கவில்லை. வேறு ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் திடீரென வேட்பாளர் மாற்றப்பட்டு மீண்டும் கடம்பூர்.செ.ராஜூ வேட்பாளராக நிறுத்தப்பட்டு 2வது முறையாக வெற்றி பெற்றார். தொடர் வெற்றியை தொடர்ந்து ஜெயலலிதா தன்னுடைய அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கினார்.
தற்போது 3 வது முறையாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் களம் காண்கிறார்.