தமிழக சட்டமன்ற தேர்தலானது, வேட்பாளர் நேர்காணல், முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, சலசலப்பு, இழுபறி என களைகட்ட தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் பிஜேபி, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில் பாமகவுக்கு 23 ,பாஜகவுக்கு 20 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுடன் மட்டுமே இழுபறி நீடித்து வருகிறது.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில், இரண்டு தொகுதிகள் அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. அதில் ஒன்று பாஜக விற்கும் மற்றொன்று புதிய தமிழகம் கட்சிக்கு இரட்டை இலை சின்னத்திலோ, பாஜகவின் தாமரை சின்னத்திலோ போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் பாஜக விற்கு திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூர் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் போட்டியிடக்கூடும். அதே வேளையில் தூத்துக்குடி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டால் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, பாஜக தொழில்பிரிவு மாவட்ட தலைவர் பொன்குமரன், மாநில சிறுபாண்மை பிரிவு செயற்குழு உறுப்பினர் ஜே.வி.அசோகன், மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட செயலாளர் விஎஸ்ஆர்.பிரபு உள்ளிட்டோர் வேட்பாளர் போட்டியில் முன்னிலையில் உள்ளனர். இதில், சசிகலா புஷ்பா, பொன்குமரன், ஜே.வி.அசோகன் இந்த மூன்றில் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கப்படலாம் என பாஜக தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் ஆர்எஸ்எஸ் தரப்பில் பொன்குமரன் பெயரை முன்மொழிவதாக சொல்லப்படுகிறது. இவர் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிட தக்கது.
கடந்த காலங்களை காட்டிலும் தற்போது தமிழகத்தில் பாஜக பெரும் அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடியில் பழைய பாஜக நிர்வாகிகளுடன் புதிதாக கட்சியில் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வரும் ஜே.வி அசோகன், சசிகலாபுஷ்பா, பொன்குமரன், வழக்கறிஞர்கள் வாரியார், சுரேஷ், தொழிலதிபர்கள் பழனிவேல்ராஜன், கமலக்கண்ணன், மணக்கரை முருகன், மனோகர் உள்ளிட்ட புதியோர் வருகை தூத்துக்குடி மாவட்ட பாஜகவிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
ஆகவே, தூத்துக்குடி தொகுதியை பாஜக விற்கு ஒதுக்க வேண்டும் எனவும், அவ்வாறு ஒதுக்கும் பட்சத்தில் தூத்துக்குடி தொகுதியை பாஜக நிச்சயம் கைப்பற்றும் எனவும் அடித்துச்சொல்கின்றனர் தூத்துக்குடி பாஜகவினர்.
திருச்செந்தூர் தொகுதியையே பாஜக விற்கு ஒதுக்க வேண்டும் எனவும், அங்கு பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தனை களம் இறக்க வேண்டும் எனவும் இன்னொரு தரப்பு பாஜக வினர் விடாப்பிடியாய் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் தொகுதியை பெற்று தருவதில், தெற்கு மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. சண்முகநாதன் மூழு வீச்சில் ஈடுபட்டு இருப்பதாகவும், வடக்குமாவட்ட செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் செ.ராஜுவும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி தொகுதியை பாஜக விற்கு ஒதுக்குவதில் அதிமுக இரு மாவட்ட செயலாளர்களும் விரும்புவதால், தெம்பாக இருந்து, சீட்டை பெற்று, களத்தில் இறங்க வேகம் காட்டி வருகின்றனர் தூத்துக்குடி பாஜக வேட்பாளர் போட்டியாளர்கள்.
எது எப்படியோ, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என இவை இரண்டிற்குமான விடை இன்னும் ஒரிரு தினங்களில் தெரியப்போகிறது என்பதுதான் காலத்தின் கட்டாயம்!