• vilasalnews@gmail.com

போலீஸ் மீது குற்றச்சாட்டு... இளம்பெண்ணுக்கு பட்டியலிட்டு பதிலடி கொடுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் தனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் தன்மீது பொய் வழக்கு பதிந்ததாகவும் கூறி வீடியோ வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மேற்படி புகாரில் காவல்துறையினர் சட்டப்படியான நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர் என விளக்கம் தெரிவித்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச்  சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையங்களில் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஒரு காவல் அதிகாரியை குறிப்பிட்டு அவர் எதிரிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை  எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மீது குற்றம் சாட்டி செய்தி தொலைகாட்சிகளில் கீழ்கண்டவாறு பேட்டி அளித்துள்ளார்.


மேற்படி பேட்டியில் கூறப்பட்ட ஒவ்வொரு குற்றசாட்டுக்கும் கீழ்கண்டவாறு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துக் கொள்கிறது.


அதன்படி மேற்படி இளம்பெண்ணின் குற்றச்சாட்டு 1:


மேற்படி இளம்பெண் கடந்த 24.12.2024 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கங்காபரமேஸ்வரி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சங்கரப்பேரி ஜிபி காலனியை சேர்ந்த எதிரி தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகாரளித்துள்ளார்.


மறுப்பு :

இந்த புகாரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்ற எண் 18/24 u/s 75 BNS & 4 of TNPHW Actன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


குற்றசாட்டு 2 :

இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த எதிரி கடந்த 29.01.2025 அன்று மேற்படி இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று என் மீது எப்படி புகார் கொடுப்பாய் என மிரட்டி கத்தியால் தாக்க முயற்சித்து தகராறு செய்ததாக கடந்த 11.02.2025 அன்று மேற்படி இளம்பெண் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


மறுப்பு :

மேற்படி புகாரின் அடிப்படையில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி சிப்காட் காவல் நிலைய போலீசார் குற்ற எண். 165/2025 u/s 329(4), 296(b), 109(1), 351(3) BNSன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி அவர்களையும் விசாரணை அதிகாரியாக நியமித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இவ்வழக்கு சம்பந்தமாக எதிர்மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் CRL.OP(MD) 3369/2025ன்படி 28.03.2025 அன்று உயர்நிதிமன்றம் ஜாமீன் பெற்றுள்ளார்.


குற்றசாட்டு 3:

மேற்படி ஆய்வாளர் ராமலட்சுமி ஆரம்ப கட்டத்தில் விசாரணையை சிறப்பாக செய்ததாக பேட்டியில் குறிப்பிட்டு பின்னர் தான் பணிபுரியும் அலுவலகத்திற்கு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டாம் என கூறியும் அதை பொருட்படுத்தாமல் ஆய்வாளர் ராமலட்சுமி அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக மேற்படி இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.


மறுப்பு:

மேற்படி குற்றசாட்டு 3ல் குறிப்பிட்டதில் புலன் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் ராமலட்சுமி, மேற்படி இளம்பெண் பணிபுரியும் அலுவலகத்திற்கு வேறொரு வழக்கான சிப்காட் காவல் நிலைய குற்ற எண் 184/24 u/s 341, 294 (b), 307, 506 (ii) IPCபடி பதிவு செய்ய்பட்ட வழக்கு சம்பந்தமாக வழக்கின் புகார்தாரரான மேற்படி PSG vestment Pvt Company நிறுவனத்தின் காவலாளியை விசாரணை செய்வதற்கும் அவ்வழக்கின் சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காகவும் மட்டுமே சென்றதும் மேற்படி இளம்பெண் வழக்கு சம்பந்தமாக செல்லவில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்துகிறது

 

குற்றசாட்டு 4:

மேற்படி இளம்பெண் பேட்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்ததனால் அந்த முன் விரோதத்தினாலேயே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் பொய் வழக்கு பதிவு தன்மீது செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


மறுப்பு :

மேற்படி இளம்பெண் மீது வந்த புகார் மனுவின் அடிப்படையிலேயே 13.04.2025 அன்று சிப்காட் காவல் நிலையத்தில் குற்ற எண் 357/2025 u/s 3(1) (S), 3(1) SC/ST Act (POA) 1989ன்படி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளரால் வழக்குபதிவு செய்யப்பட்டது. ஆனால் மேற்படி இளம்பெண் காவல்துறை அதிகாரி மீது 21.04.2025 அன்றுதான் புகார் அளித்துள்ளார். மேற்படி இளம்பெண் புகார் அளிப்பதற்கு முன்பாகவே சிப்காட் காவல் நிலையத்தில் குற்ற எண் 357/2025  ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காவல்துறை அதிகாரி முன்விரோதத்தினால் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறுவது தவறானது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி யார் புகார் மனு அளித்தாலும் FIR பதிவு செய்து விசாரணை செய்வது காவல்துறையின் நடுநிலையான கடமையாகும். BNSSபடியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படியும் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தன் கடமையை செய்துள்ளனர்.


குற்றசாட்டு 5:

எதிரி மீது தான் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் வாபஸ் பெற சொல்லி தான் பணிபுரியும் நிறுவன முதலாளியிடம் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.


மறுப்பு:

ஒரு FIR பதிவு செய்த விசாரணையில் ஒரு வழக்கை வாபஸ் வாங்க முடியாது. மாறாக வாபஸ் பெற வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையான அனுமதி பெற்றால் மட்டுமே வாபஸ் பெற முடியும். எனவே வாபஸ் வாங்க முடியாத வழக்கை காவல்துறை அதிகாரி வாபஸ் பெற சொல்லி நிறுவன முதலாளியிடம் கூறியது என குற்றம் சாட்டியது முற்றிலும் தவறாகும்.


குற்றசாட்டு 6 :

மேற்படி இளம்பெண் எதிரி தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் அதனால் தனக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவிலை என்றும், எதிரிக்கு சாதகமாக காவல்துறை செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


மறுப்பு

மேற்படி இளம்பெண் பாதுகாப்பு கருதி அளித்த மனுவின் அடிப்படையில் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை CRL.OP(M.D) (M.D) No. 4450 of 2025 உத்தரவின்படி இளம் பெண்ணிடம் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. இது சம்பந்தமாக காவல் ஆய்வாளர் மூலமாக 27.03.2025 அன்று மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


குற்றசாட்டு 7:

மேற்படி இளம்பெண் அளித்த மனுவின் அடிப்படையில்  விசாரணை அதிகாரியாக ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களே விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரே விசாரணை மேற்கொண்டால் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.


மறுப்பு:

மேற்படி இளம்பெண் தூத்துக்குடி ஆட்சியரிடம் அளித்த மனுவிற்கு  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி 21.04.2025 அன்றே விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தீபு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள போது ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக இளம்பெண் கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது சம்பந்தமாக கீழ்க்கண்டவாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.


1.மேலும் PSG vestment Pvt Company நிறுவனத்தினர், ஊழியர்கள் மற்றும் மேற்படி இளம்பெண் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக எதிர் மனுதாரருக்கு எதிராக 5 வழக்குகளும், எதிர்மனுதாரர் இளம்பெண்ணுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் பதிவு செய்யபட்டுள்ளது.


2.மேலும் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாலும் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் சிப்காட் காவல் நிலையத்தில் 14.02.2025 அன்று தூத்துக்குடி சார் ஆட்சியர் நடுவர் முன்பு விசாரணைக்காக ஆஜராக அறிவுறுத்தப்பட்டது.


3.PSG vestment Pvt Company நிறுவனத்தின் முதலாளி, பொது அமைதியை பேணுவதற்கான நடவடிக்கையின் மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் CRL.OP(M.D) No. 4386/2025ல் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளார்.


4.மேற்படி PSG vestment Pvt Company நிறுவனத்தினர் கொடுத்த அனைத்து புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி இவ்வழக்குககள் சம்மந்தமாக கடந்த 20.02.2025 அன்று மேற்படி வழக்குகளின் முதல் விசாரணை அதிகாரியை மாற்றம் செய்து விசாரணை அதிகாரியை மாற்றம் செய்து விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளரையும் மேற்பார்வை அதிகாரியாக நியமித்துள்ளார்.


5.சிப்காட் காவல் நிலைய குற்ற எண் 357/2025 u/s 3(1) (S), 3(1) SC/ST Act (POA) 1989 வழக்கு சம்பந்தமாக மேற்படி இளம்பெண் விசாரணை அதிகாரியான தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  விசாரணையில் நம்பிக்கையில்லை என்று பொது வெளியில் கூறி வருவதின் பேரில், மேற்கூறிய காரணங்களுக்காக  தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வழக்கின் விசாரணை அதிகாரியான தன்னை மாற்ற கூறி கோரிக்கை வைத்ததின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மூலமாக புதிய விசாரணை அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


எனவே மேற்கொண்ட நடவடிக்கைகள் காவல்துறையின் மூலம் நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.

  • Share on

வெளியே நடமாடுவதை தவிர்க்கவும்.... தூத்துக்குடி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள தகவல்!

  • Share on