
தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை பழங்காநத்தம் காளியப்ப பிள்ளை நாடார் தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி (52). இவர் தனது குடும்பத்தினர்கள் 17 பேருடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பேரனுக்கு மொட்டை போடுவதற்காக ஒரு வேனில் வந்தனர். வேனை விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த பரமசிவம் மகன் டிரைவர் சரவணகுமார் (52) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
சுவாமி தரிசனம் செய்த பின்னர் இன்று மதியம் மீண்டும் மதுரைக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டு செல்லும் போது, தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலை, ஸ்டெர்லைட் ஆலை அருகே வேன் திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த 4 குழந்தைகள், 8 பெண்கள், டிரைவர் உட்பட 18 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.