
தூத்துக்குடியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினரை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைத்த நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் 50க்கும் மேற்பட்ட திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினரை தவெகவில் இணைத்த சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து, திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி,
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இதில், அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் வார்டுகளை சேர்ந்த திமுகவினரும் அடங்குவர்.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாநகரம் பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த புகழ், சரவணன் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி ஏற்பாட்டில் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி, தூத்துக்குடி - எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் தான், அமைச்சர் கீதாஜீவனின் சொந்த வார்ட்டை சேர்ந்த திமுக வினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினரை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்த நிகழ்வை தமிழக வெற்றிக்கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையிலான தவெகவினர் செய்திருப்பது உள்ளூர் அரசியலில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.