
தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
மனுவில் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தொடர்ந்து பல்வேறு மக்கள் பணிகளை செய்து வருகின்றோம். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லேபர் காலணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை போதுமான குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பகுதி முழுவதும் குடிநீருக்கு அனைத்து குடும்பங்களுக்கும் பொதுவாக ஒரு குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. அந்த குடிநீர் குழாயும் அடிக்கடி பழுதாகி பொதுமக்களுக்கு வரக்கூடிய குடிநீர் வராமல் போய்விடுகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் பொதுக்கழிப்பறை 4 மட்டுமே உள்ளது. அதுவும் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.
ஆகையால் அந்த பகுதி மக்கள் கழிப்பறைகள் இன்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் வெளிப்புறங்களை கழிவறையாக பயன்படுத்தக்கூடிய நிலையுள்ளது. அந்த பகுதிகளை சுற்றிலும் வடமாநிலத்தவர்கள் தங்கியிருப்பதால், கழிப்பறை இல்லாமல் வெளிபுறங்களில் செல்வது பாதுகாப்பற்ற நிலையாக உள்ளது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு மேற்படி பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கிட மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் புழக்கங்கள் அதிகமாக உள்ளது. மேலும் மேற்படி போதைப் பொருட்கள் அனைத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் இருந்து வருகிறது.
இதனால் சிறு வயதிலேயே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிலை அறியாது கொலை உள்ளிட்ட பல்வேறு கொடுங்குற்றச் செயல்களில் 18-வயதிற்குட்பட்ட குழந்தைகளும், மாணவர்களும் மற்றும் இளைஞக ஈடுபட்டு தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கானது சீர் குலைந்து வருகிறது.மேலும் போதையின் காரணமாக இளைஞர்கள் ஏராளமானோர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். இந்த போதைப் பொருட்களினால் சமூகத்தில் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்து, பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.