
தூத்துக்குடியில் டிரைவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் என்ற வெள்ளையன் (24). டிரைவரான இவர், புதிய லோடு ஆட்டோ வாங்கியதற்காக தனது நண்பர்களுக்கு கடந்த 13ஆம் தேதி பார்ட்டி கொடுத்தார். அப்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாம். பின்னர், இரவில் ஸ்ரீராமை நண்பர்கள் 3 பேர் 3ஆவது மைல் பகுதிக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதில் 3 பேரும் சேர்ந்து ஸ்ரீராமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த ஸ்ரீராம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதன்குமார், சிவா, திருமலைநம்பி ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி திரு.வி.க. நகரிலுள்ள மதன்குமார் வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்று ஜன்னல் கதவு வழியாக பெட்ரோலை ஊற்றித் தீவைத்துவிட்டு தப்பியோடினர். இதில், துணி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக இருவரைப் பிடித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.