
அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை அளித்த பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கோவை ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் இரவு கோவையிலிருந்து நெல்லைக்கு வரும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். இரவு நேரத்தில் பெண் தனியாக பயணிப்பதை அறிந்த கண்டக்டர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பெண் தனது பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 8 பேரை அழைத்துக் கொண்டு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று காலையில் காத்திருந்தனர்.
இது குறித்த தகவல் புதிய பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. பிரச்சனை எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என போலீசாரும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு அந்த பேருந்து, புதிய பேருந்து நிலையம் வந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் கண்டக்டரை சூழ்ந்து கொண்டு விசாரித்தனர்.
அப்போது போலீசார் தலையிட்டு மேலப்பாளையம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரிப்பதாக கூறி கண்டக்டரை அழைத்துச் சென்றனர். பின்னர் பெண்ணிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், பஸ் கண்டக்டரான கோவையைச் சேர்ந்த மகாலிங்கம் ( 43 ) என்பவரை கைது செய்தனர். நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அதிகாலையில் நடந்த இச்சசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.