
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பயணிகள் - நடத்துனர்களிடையே சில்லறை தொடர்பாக வாக்குவாதம் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், டிஜிட்டல் முறையிலான பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் அரசுப் பேருந்துகளில் கியூஆர் கோடு அல்லது கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் இப்பரிவர்த்தனையை போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும் போது, "அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெபிட், கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்தோ, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ, ஜிபே, போன் பே போன்ற செயலிகள் மூலமாகவோ பணம் செலுத்தி, நடத்துனரிடம் பயணச்சீட்டு பெறலாம்" என தெரிவித்தார்.
அப்போது, கோட்ட மேலாளர் ரமேஷன், நகர கிளை மேலாளர் கார்த்திக், தொமுச கிளைத்தலைவர் லிங்குசாமி உள்ளிட்டர் உடன் இருந்தனர். மேலும், சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் ஆபேல் ராஜமணிக்கு போக்குவரத்து கழக பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கி பராட்டினார்.