
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று ஏப்.,14 நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, அரசாணையின் படி இந்த ஆண்டு நாளை ஏப்.,15 (செவ்வாய்க்கிழமை) முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது நீக்குதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
கிழக்கு கடலோர பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் விதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடிக்கு மீன்களின் வரத்து குறைவாக இருக்கும் என்பதால், மீன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.