
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 104 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று (ஏப்.11) வெளியிட்ட செய்திக்குறிப்பில் :-
தூத்துக்குடி மாவட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 104 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) பின்வரும் விபரப்படி வெளியிடப்படுகிறது.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவோருக்கு, தொகுப்புதியத்தில் மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-ம், ஓராண்டு கால பணிக்குப்பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். கல்வித்தகுதி – பத்தாம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் அனைவரும் கட்டாயம் தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது தகுதி
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது மற்றும் இதர தகுதிகளின் நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். மையம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்துகொள்ளலாம்.
இப்பணிக்கு நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைபட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும் (ஊராட்சி-குக்கிராமம் - வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை).
விண்ணப்பங்களை https://thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதிரி விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும். இனசுழற்சி வாரியான காலிப்பணியிட விவரங்கள் https://thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 11.4.2025 முதல் 28.4.2025 வரை (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self Attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
விதவை, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய் / தந்தை இறப்புச்சான்று) சான்றிதழ்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் [ குறைவான பார்வைத்திறன் (மூக்கு கண்ணாடி மூலம் சரிசெய்யப்பட்டது), உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளின் முழு செயல்பாட்டு திறன், உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது), திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல்திறன் குறைபாடு (மிதமான) ] அதற்கான சான்றிதழ்களின் (அடையாள அட்டை) நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும்.
காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையினை இரத்து செய்வதற்கு / திரும்ப பெறுவதற்கு / திருத்துவதற்கு / கெடு தேதியினை நீட்டிப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு முழு உரிமை உண்டு. விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளான 28.04.2025 அன்று மாலை 05.45 மணிக்கு பிறகு வரப்பெறும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அஞ்சல் துறையின் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் கால தாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 104 சத்துணவு சமையல் உதவியாளர் பணிடங்கள் எங்கெல்லாம் உள்ளது?