
குளத்தூர் அருகே வைப்பாற்றில் அரசு நிலத்தில் கனிம வள கடல் மண் திருடிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் கனிமவள கருப்பு கடல் மண் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், வைப்பார் விஏஓ மாரியம்மாள், உதவியாளர் முத்துப்பாண்டி ஆகியோர் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரது உப்பளத்தில் சுமார் 8 யூனிட் கடல் மண் புதிதாக கொட்டி வைத்திருந்ததை கண்டு பிடித்து விசாரித்தனர்.
அதில், தர்மபுரி மாவட்டம் திருமால்வாடியைச் சேர்ந்த முருகவேல் என்பவரது ஜேசிபி மூலம், வேம்பாரை சேர்ந்த அந்தோணி பிரான்சிஸ், முனீஸ்வரன், செவல்பட்டி ரவி ஆகியோரது டிராக்டரில் இரவு நேரத்தில் அருகில் உள்ள அரசு புஞ்சை நிலத்தில் சட்டவிரோதமாக கனிமவள மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது விஏஓ மாரியம்மாள், குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.