
கல்லூரணி கிராமத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், வைப்பார் ஊராட்சி, இனம் கல்லூரணி கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இனம் கல்லூரணி கிராமத்திற்கு நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. வைப்பார் ஆற்று பாலம் அருகில் புதிய வட்டக்கிணறு அமைத்து, அதனைச் சார்ந்து புதிய குழாய் அமைத்து, குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போன்று, வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரக்கூடிய தண்ணீரை சின்டெக்ஸ் டேங்க் தொட்டியில் நிரப்பி கூடுதல் நல்லிகள் அமைத்து குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
ஜல்ஜீவன் திட்டத்தில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். மயான சாலையை தார் சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது