
கோவில்பட்டி அருகே டாரஸ் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தண்டனை கைதி உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த ஆதிமூலம் மகன் சங்கர்(43). டாரஸ் லாரி டிரைவர். இவர் லாரியில் பந்தல்குடியில் இருந்து களிமண் ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூர் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், டாரஸ் லாரியின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த குமரி மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜன் (64), ஜெனிஸ் (25), கோவை ஹவுசிங் போர்டை சேர்ந்த ரவி (60), பஸ் கண்டக்டர் ஜோசப்தாஸ் (43) மற்றும் வழக்கு விசாரணைக்காக மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகிவிட்டு பாளை சிறைக்கு திரும்பிக்கொண்டிருந்த தண்டனை கைதி கண்ணன் என்ற மாயக்கண்ணன் (42), அவருக்கு பாதுகாப்பாக சென்ற ஆயுதப்படை காவலர்கள் கதிரேசன் (42), அஜய் மாரியப்பன் (32) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடம் சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் தங்கராஜன், தண்டனை கைதி கண்ணன் என்ற மாயக்கண்ணன் ஆகிய 2 பேரும் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.