
சிறுநீரக பிரச்சனைகளால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, சின்னமலைக்குன்று, உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று ( ஏப்ரல் 7 ) மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்:-
உசிலம்பட்டி கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். எங்கள் கிராமத்திற்கு சின்னமலைக்குன்று கிராமத்தில் (சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் ) இருந்து தான் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த குடிநீரும் உவர்ப்பு தன்மை அதிகம் கொண்டதாக உள்ளது. அதே தண்ணீரைத்தான் எங்கள் கிராமத்து மக்கள் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கிராமத்தில் எந்த இடத்தில் போர் போட்டாலும் உப்புத் தண்ணீர்தான் வருகிறது. அந்த தண்ணிரை வாயில் வைக்க முடியாது அளவுக்கு உப்புதன்மை நிறைந்த தண்ணீராக உள்ளதூ. சின்னமலைக்குன்று கிராமத்தில் இருந்து வரும் தண்ணீர் குழாய் பழுதாகி விட்டால் குளத்து தண்ணீரைத்தான் குடிக்க வேண்டியுள்ளது. அதனால் எங்கள் கிராமத்து மக்கள் உடல் நிலை சரியில்லாமல் கிட்னி பெயிலியர் ஆகி அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள்.
மேலும், இறக்க கூடிய ஆட்கள் கிட்னி பெயிலியர் ஆகித்தான் இறக்கிறார்கள். எங்கள் கிராமத்து வழியாக செல்லும் சீவலப்பேரி கூட்டு குடிநீரை எங்கள் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி எங்கள் கிராமத்து மக்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.