
எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் மற்றும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் மொத்தம் ரூபாய் 30,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு 6 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த வழக்கில், வடக்கு முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ் (31) என்பவரை எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவு கொலை குற்றத்திற்கான சட்டப்பிரிவு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று (05.04.2025) குற்றவாளியான அருண்ராஜ் என்பவருக்கு, கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும், வன்கொடுமை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும், போக்சோ குற்றத்திற்காக எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பீர் முகைதின் மற்றும் எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சங்கரகோமதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.