
தூத்துக்குடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். விளையாட்டு வீராங்கனையான அவர், கடந்த மாதம் நாகர்கோவிலில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார். அப்போது, மாணவிக்கு துணையாக அக்கல்லூரியின் பேராசிரியர் ரவி என்பவர் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து, மாணவி அறையில் தனியாக இருந்தபோது பேராசிரியர் ரவி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், பேராசிரியரின் கார் டிரைவர் ஷியாம் என்பவரும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பேராசிரியர் ரவியை கைது செய்து, கார் டிரைவர் ஷியாமை தேடி வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.