
தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாள்களாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வரன்முறை திட்டம் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஒவ்வொரு வட்டத்திலும் வருவாய்த் துறை அலுவலா்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தூத்துக்குடி தாலுகா பகுதிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் என ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாட்களாகக் குடியிருந்து வருவோா் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
அதில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கரப்பேரி, லோகியாநகர், லெவிஞ்சிபுரம், முனியசாமிபுரம் ஆகிய பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் நேற்று ( மார்ச் 26 ) வீடுதோறும் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
இப்பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் இலவச பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன் உள்ளிட்டார் உடன் இருந்தனர்.