
கோடை காலம் துவங்கி விட்டதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கடந்த ஒரு வாரமாக மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.
கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளான இளநீர், கம்பங்கூழ் பதநீர், நுங்கு, கரும்பு சார் போன்ற குளிர்பானங்களை தேடி அதனை பருகுகின்ற நிலையில் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு துவங்கப்பட்ட குளிர்பான கடைகளில், குறிப்பாக பதநீர் விற்பனை செய்கின்ற இடங்களில் அந்த பதநீர் சுத்தமாக பனை மரங்களில் இறக்கப்பட்டு வழங்கப்படுகிறதா? அல்லது ரசாயன முறை மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து சம்மந்தப்பட்ட உணவு தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள், அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வு நடத்த வேண்டும்.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற பதநீர் கடைகள் புதிதாக நுங்கு வியாபாரத்தோடு இணைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது போன்ற பதநீர் கடைகளை ஆய்வு செய்து முறையாக பனை மரங்களில் இருந்து இறக்கப்படுகின்ற அந்த பதநீர் தான் விற்பனை செய்யப்படுகிறதா? அல்லது கெடாமல் இருப்பதற்காக கெமிக்கலாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு தரமான குளிர்பானங்கள், பதநீர் முதலியவைகள் கிடைக்க செய்ய வேண்டும்
என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோருக்கு, மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான, வழக்கறிஞர் சுப மாடசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.