
எட்டயபுரத்தில் வீடு, வீடாக சென்று மயில் இறகால் மந்திரித்து ரூ.1 லட்சம் வரை நூதன முறையில் தட்சணையாக வசூலித்த மதுரை தம்பதியிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மதுரையைச் சேர்ந்த குழுவினர் தனித்தனியாக பிரிந்து தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் நடுவிற்பட்டி இல்லத்து பிள்ளைமார் தெருவில் நேற்று முன்தினம் வீடு, வீடாகச் சென்று மயில் இறகால் மந்திரிப்பு செய்துள்ளனர்.
வீடுகளில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்றுவதாகவும், தோஷங்களை நிவர்த்தி செய்வதாகவும் கூறி ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இவ்வாறு 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு லட்சம் வரை தட்சணையாக வாங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள், எட்டயபுரம் போலீசில் புகார் செய்தனர். இதையறியாமல் மதுரை குழுவினர், நேற்று மீண்டும் எட்டயபுரம் பகுதிக்கு வந்துள்ளனர். தகவலறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார், மயில் இறகால் மந்திரிப்பு செய்து கொண்டிருந்த தம்பதியை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் 6 பேரிடம் இருந்து அவர்கள் வசூலித்த பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்துள்ளனர். மேலும், இனிமேல் இதுபோன்று மந்திரிப்பு செய்வதாக கூறிக் கொண்டு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.