
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் அருகே உள்ள பனையூரைச் சேர்ந்த கடற்கரைலிங்கம் மகன் கொடிலிங்கம் ( 24 ). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துவேல் ( 50 ). இருவரும் பைக்கில் குளத்தூர் பஜார் வீதிக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, பனையூர் விலக்கு அருகே வரும் போது கொடிலிங்கம் வந்த பைக்கும் எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட கொடிலிங்கம் சம்பவ இடத்திலேயே பலத்த காயத்துடன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த முத்துவேல் மற்றும் எதிரே பைக்கில் வந்த குளத்தூர் காலனியைச் சேர்ந்த பாண்டி மகன் மகேஷ் குமார் ( 21 ) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குளத்தூர் போலீசார் பலியான கொடிலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.