
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டது.
இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிக்காக கொண்டுவரப்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை ஆலையில் இருந்து அகற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று ( மார்ச் 20;) முதல் 80 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்களை அகற்ற அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து, இன்று முதல் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பொருட்களை அகற்றும் பணியானது தொடங்கியது.
இதற்காக கண்டெய்னர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள், குஜராத் கொண்டு செல்லப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் பொருட்கள் குஜராத்தில் உள்ள டாமன் – டையூ பகுதிக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.