
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், எட்டயபுரம் வட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று (20.03.2025) அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கள ஆய்வு மேற்கொண்டார்.
நேற்றைய தினம் காலை முதல் எட்டயபுரம் வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று காலையில் எட்டயபுரம் வட்டம், கீழஈரால் ஊராட்சிப் பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்து பார்வையிட்டு, கீழஈரால் தூ.நா.தி.அ.க. துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, காலை உணவு திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்து, சரியான முறையில் மாணவ மாணவியர்களுக்கு சரியான முறையில் பரிமாறப்படுகிறதா என கேட்டறிந்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி உணவின் சுவை குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறதா என கேட்டு கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்டு அங்கு வழங்கப்டும் சிகிச்சைகள் குறித்து மருவத்துவர்களிடமும் கேட்டறிந்து கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட சுகாதார அலுவலர் (கோவில்பட்டி) மருத்துவர் வித்யா விஸ்வநாதன், எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.