
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்திலுள்ள ஒரு தேசியமய வங்கி கிளையில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் வாங்கியதாக பதிவான வழக்கில் வங்கியின் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அவ்வங்கியின் முது நிலை மேலாளராக சாமுவேல் ஜெபராஜ், பகுதி நேர ஊழியராக நாராயணன் பணிபுரிந்தனர். இரு மாணவிகள் நர்சிங் படிப்பிற்காக அவ்வங்கியில் கல்விக் கடன் கோரி 2010 ல் விண்ணப்பித்தனர். கடன் அனுமதிப்பதற்காக ரூ.8000 லஞ்சம் பெற்றதாக சாமுவேல் ஜெபராஜ், நாராயணன் மீது சி.பி.ஐ., வழக்கு பதிந்தது.
இவ்வழக்கானது மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அந்நீதிமன்றம் இருவரையும் 2018 ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் உயர்நீதி மன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:
ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் கடமையை செய்ய வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்படுவதன் மூலம் அல்லது அதை மீறுவதன் மூலம் ஊழலில் ஈடுபடுவதற்கான வழிகளை கண்டுபிடிக்கின்றனர். ஊழல் முறையின் அலைவரிசை பல்வேறு கோணங்களில் பரவுகிறது. போதிய நிதி ஆதாரம் இல்லாமல், ஏழை மாணவர்களால் கல்லுாரி கல்வியைத் தொடர முடியாது.
சமூக நீதியை நிலைநாட்டும் நலத்திட்டமாக கல்விக்கடன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் எந்த ஒரு மாணவருக்கும் உயர் கல்வியை தொடரும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதே அதன் நோக்கம். கல்விக் கடனிற்காக வங்கியை அணுகும் மாணவர் களிடம் இரக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வழக்கில் கல்விக் கடனிற்காக லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
சாமுவேல் ஜெபராஜ் சார்பில் நாராயணன் லஞ்ச பணத்தை பெற்றுள்ளார். சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டை சி.பி.ஐ., தரப்பு நிரூபித்துள்ளது. விடுவித்து கீழமை நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. அந்நீதிமன்றம் தவறுதலாக விடுதலை செய்துள்ளது. அந்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது சாமுவேல் ஜெபராஜ் இறந்துவிட்டதால் ஊழல் தடுப்பு சட்டப்படி அவருக்கு தண்டனை விதிக்க முடியாது. நாராயணனுக்கு எதிராக சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் தடை எதுவும் இல்லை.
அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. கடன் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.35 ஆயிரத்தை இழப்பீடாக அபராத தொகையிலிருந்து வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்